தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.
இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது.
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
* வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
* வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.
*குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
* வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.
* வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும்.
வெற்றிலை ரசம் செய்ய தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.